கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக வைத்த நினைவு சின்னம் பின்பு இயேசு அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரிரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். லூக் 22:19-20 தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
III.“பவுல், அவர்கள் மீது கைகளை வைத்ததும், தூய ஆவி, அவர்கள் மேல் இறங்கியது. அப்போது அவர்கள், பரவசப் பேச்சு பேசினர். இறைவாக்கும் உரைத்தனர்” - தி.ப 19:6.
இது எபேசு திருச்சபையில் நடந்தது.
IV.“இவ்வாறு அவர்கள் ஜெபித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய், கடவுளின் வார்த்தைகளை துணிவுடன் எடுத்துக் கூறினர்” - தி.ப 4:31.
இது ஆதிசபை கூடி ஜெபித்தபோது நிகழ்ந்தது.
V.“அப்போது, பேதுருவுக்கு பசி உண்டாயிற்று. அவர் உணவருந்த விரும்பினார். உணவு தயாராகிக் கொண்டிருக்கும் போது, அவர் மெய் மறந்த நிலைக்கு உள்ளானார்” - தி.ப 10:10.
இது பேதுருவுக்கு கிடைத்த, தொடர்ந்த ஆத்மீக அனுபவம்.
VI.“பின்பு நான் ஜெருசலேம் திரும்பி வந்தேன். கோவிலில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்த போது, நான் மெய் மறந்த நிலைக்குள்ளானேன்” - தி.ப 22:17.
இது பவுலுக்கு உண்டான, தொடர்ந்த ஆத்மீக அனுபவம்.
பவுலின், முதல் ஆத்மீக அனுபவத்தை, தி.ப 9:1-9 - ல், பார்க்கிறோம்.
கிறிஸ்தவ சமயமும் - ஆவிக்குரிய அனுபவமும் :
நாம் மேற்சொன்ன, ஆத்மீக அனுபவத்தை, “ஆவிக்குரிய அனுபவம்” என்று, வேதம் சொல்கிறது.
கத்தோலிக்க சபைகள் - உரோமன் கத்தோலிக்க சபை, சிறியன் கத்தோலிக்க சபை, மலங்கரை கத்தோலிக்க சபை போன்றவை. கத்தோலிக்க ஆவிக்குரிய சபைகள் - கத்தோலிக்க கரிஸ்மேட்டிக் சபைகள் (Catholic Charismatic Churches) - கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து; கத்தோலிக்க கரிஸ்மேட்டிக் பெத்தானியா சபைகள் (Catholic Charismatic Bethany Churches) - கனடா; கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபைகள் (Catholic Pentecost Churches) - ஸ்பெயின்; கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் (Catholic Pentecost Mission) - மார்த்தாண்டம் போன்றவை.
புராட்டஸ்டண்டு ஆவிக்குரிய சபைகள் - இந்தியன் பெந்தக்கோஸ்து சபைகள், பூரண நற்செய்தி சபைகள், கிருபாசன சபைகள், அசம்பிளி ஆஃப் காட் சபைகள் போன்றவை.
கத்தோலிக்க ஆவிக்குரிய சபைகளுக்கும், புராட்டஸ்டண்டு ஆவிக்குரிய சபைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் :
ஒற்றுமைகள் :
1. ஒரே ஆவிக்குரிய அனுபவங்கள், 2. விசுவாச உறுதி, 3. சத்தியங்கள் மேல் கொண்ட, வைராக்கிய பிடிப்பு, 4. ஆவியின் கனிகள் மேலும், இறை விருப்பத்தின் மீதும், வைத்துள்ள அலாதி பற்று, 5. வேத வெறி.
வேற்றுமைகள் :
புராட்டஸ்டண்டு ஆவிக்குரிய சபைகள்
கத்தோலிக்க ஆவிக்குரிய சபைகள்
1. பைபிள் - புராட்டஸ்டண்டு
1.பைபிள் - கத்தோலிக்க பைபிள்
2. பைபிள் விளக்கம் - புராட்டஸ்டண்டு (சிலர் தனி விளக்கம்)
2. பைபிள்விளக்கம் - கத்தோலிக்க பைபிள் விளக்கம்
3.வழிபாடு- புராட்டஸ்டண்டு வழிபாட்டு முறை
3. வழிபாடு- கத்தோலிக்க வழிபாட்டு முறை
4. விசுவாசப்பிரமாணம் - புராட்டஸ்டண்டு
4.விசுவாசப்பிரமாணம் - கத்தோலிக்க
5. பாரம்பரியம் - புராட்டஸ்டண்டு பாரம்பரியம்
5. பாரம்பரியம் - கத்தோலிக்க பாரம்பரியம்
கத்தோலிக்க ஸ்தாபன சபைகளுக்கும், கத்தோலிக்க ஆவிக்குரிய சபைகளுக்கும் உள்ள, ஒற்றுமை வேற்றுமைகள் :
கத்தோலிக்க ஆவிக்குரிய சபைகள், கத்தோலிக்க ஸ்தாபன சபைகளுடைய, நிர்வாகத்தின் கீழ் இல்லை.
கத்தோலிக்க ஆவிக்குரிய சபைகள், கத்தோலிக்க ஸ்தாபன சபைகளுடைய விசுவாசப்பிரமாணத்தை, வழிபாட்டை, பைபிள் விளக்கத்தை ஆவிக்குரிய வெளிச்சத்தில், ஏற்றுக் கொள்கின்றன.
மேற்கண்ட பரந்த பின்னணியில், “கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷனைக்” காண்போம்.
கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் (CPM) :
1. கிறிஸ்தவ சபை :
கிறிஸ்து என்றால், அபிஷேகம் பெற்றவர் - யோவா 1:41.
கிறிஸ்தவர்கள் என்றால், அபிஷேகம் பெற்றவர்கள் - 1யோவா 2:20.
அபிஷேகம் என்றால், ஆவியானவரால் ஆட்கொள்ளப்படுவது - லூக் 4:1.
எனவே, கிறிஸ்தவ சபை என்றால், “ஆவியானவரால், அபிஷேகம் பெற்றவர்களின் கூட்டமைப்பு”, என்பது பொருள்.
கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவன், கிறிஸ்தவன் அல்ல - உரோ 8:9.
2. கத்தோலிக்க சபை :
கிறிஸ்தவ சபையின், தொடக்க காலத்தில், உலக முழுமைக்கும் என்று, ஒரு “சமயம்”இருக்கவில்லை.
ஒவ்வொரு தேசத்துக்கும், நாட்டிற்கும், இனத்திற்கும் என்று, தனித்தனி சமயங்களே இருந்தன.
ஆனால், ஆதி கிறிஸ்தவ சபையில், “பெந்தக்கோஸ்து மிஷன்”, எவ்வளவு அழுத்தமாக இருந்தது என்றால், அது தன்னை, அகில உலகத்துக்கும் பொதுவாக இருக்ககூடிய சபை என்று, பறைசாற்றியது.
“கத்தோலிக்க” என்றால் = “அகில உலக”, என்று பொருள்.
எனவே, ஆதி சபையின் வளர்ச்சியில், கிறிஸ்தவ சபை, கத்தோலிக்க சபையாகப் பரிணாமித்தது.
இந்த பின்னணியில், தி.ப 1:8 - ன் படி, “பெந்தக்கோஸ்து மிஷனை”, செய்து வரும், எல்லா கிறிஸ்தவ சபைகளும், “கத்தோலிக்க சபைகளே”.
3. பெந்தக்கோஸ்து மிஷன் :
தன்னுடைய போதனைகளை ஏற்று, தன்னை பின்சென்றவர்களை, இயேசு, “தந்தை வாக்களித்த ஆவிக்காக”, காத்திருக்கச் சொன்னார் - லூக் 24:49.
காத்திருந்த ஆதி சீடர்கள் மேல், தந்தை வாக்களித்த ஆவி, யூதர்களின் பெந்தக்கோஸ்து நாளன்று, பொழியப்பட்டது - தி.ப 2:1-4.
பெந்தக்கோஸ்து நாளன்று, ஆதி சீடர்கள் பெற்ற “அனுபவமே”, “கிறிஸ்தவம்” என்ற பெயரில், புதுப்பிறப்பு அடைந்தது.
4. திருத்தூதர்பணி 1:8 :
“தூய ஆவி உங்களிடம் வரும் போது, நீங்கள் கடவுளது வல்லமையை பெற்று, எருசலேமிலும், யூதேயா, சமாரியா முழுவதிலும், உலகின் கடை எல்லை வரைக்கும், எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்”.
எனவே, தி.ப 1:8 - ன் படி,
தூய ஆவியையும் வல்லமையையும் பெற்று - “பெந்தக்கோஸ்து அனுபவம்”.
உலகின் கடை எல்லை வரை என்பது – “கத்தோலிக்க”
எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்பது – “மிஷன்” அல்லது ஊழியம்.
எனவே, “கத்தோலிக்க பெந்தக்கொஸ்து மிஷன்” என்பது - ஆவிக்குரிய அனுபவத்தோடு, இயேசுவை (மீட்பை), அகில உலகத்துக்கும் அளிப்பதே ஆகும்.
அதாவது, ஆவியானவரின் வழிநடத்தலால், மீட்புக்குரிய போதனையைத் தந்து - யோவா 16:13; மத் 28:20, ஆவியின் வல்லமையால், வரங்களை செயல்படுத்தி - மாற் 16:20, ஆவிக்குரிய அனுபவங்களோடு, அகில உலகத்திலும், மக்களை “மீட்பில்” வழிநடத்தும் பணியே, “கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன்”.
5. ஆதிசபையில் “பெந்தக்கோஸ்து மிஷன்” :
பெந்தக்கோஸ்து நாளிலேயே, பெந்தக்கோஸ்து மிஷனும், ஆரம்பமானது.
பேதுருவின் முதல் “பெந்தக்கோஸ்து மிஷனரி” போதனையால், பல்லாயிரம் மக்கள், மீட்படைந்து, சபையில் சேர்ந்தனர் - தி.ப 2:41, 4:47
பெந்தக்கோஸ்து நாளின் அழுத்தம், வேகம், பாதிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்றால், பேதுருவும், பவுலும், இன்னும் எல்லா மிஷனரிகளும், “பெந்தக்கோஸ்து அனுபவத்தை” மக்களுக்கு கொடுப்பதிலும், ஆவிக்குரிய உபதேசங்களை மக்களுக்கு வழங்கி, சபைகளை கட்டியெழுப்புவதிலும், முழு மூச்சாய் உழைத்தனர்.
இந்த பெந்தக்கோஸ்து மிஷனின் விளைவே, புதிய ஏற்பாட்டின் இருபத்தேழு புத்தகங்களும் ஆகும்.
கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷனின் தொடர்ச்சி :
6. ஆதிசபைக்கு பிந்திய சபை :
கி.பி 3 - ம் நூற்றாண்டு வரை, ஆதிசபை, பெந்தக்கோஸ்து மிஷனில் வளர்ந்து, ஒரு ஆவிக்குரிய சபையாகவே இருந்தது.
இந்நாட்களில், “ஆவிக்குரிய சபைக்கும்”, அதை “ஆளும் நிர்வாகத்துக்கும்” இடையே உள்ள, கருத்தொற்றுமை மிகவும் அதிகமாக இருந்தது.
மேலும், அதுவரையிலும் உரோமை மன்னர்கள், திருச்சபையை, கொடுமையாக துன்புறுத்தி வந்தனர்.
ஆனால் கடைசியாக, உரோமை மன்னன் கான்ஸ்டன்டைன் என்பவர், கிறிஸ்தவ சபையை தழுவிக் கொண்டார்.
இதன் விளைவாக, திருச்சபையை துன்புறுத்தியதை விட்டு, கான்ஸ்டன்டைன் மன்னன், தான் கிறிஸ்தவரானதோடு, தன் நாட்டிலுள்ள அனைத்து மக்களையும், கிறிஸ்தவராகும்படி தூண்டினார்.
“மனம் திரும்புதல்”, “பாவமன்னிப்பு”, “அபிஷேகம்”, “வேத சத்தியத்தின்படி வாழ்வு” என்ற நேர்வழியில் வந்து, திருச்சபைக்குள் நுழைவதை விட்டுவிட்டு, மக்கள், பெயர் மாற்றங்களிலும், வழிபாட்டு மாற்றங்களிலும் மூழ்கி, ஸ்நானம் எடுத்து, மிக குறுகிய நாட்களில், கிறிஸ்தவர்களானார்கள்.
இதனால், “பெந்தக்கோஸ்து மிஷனின்” ஒளி மங்கி, “உலகத் திருச்சபை” ஒன்று உதயமாக ஆரம்பித்தது.
7. கத்தோலிக்க சபையில் பெந்தக்கோஸ்து மிஷன் :
ஆதிசபைக்கு பிந்திய, அதாவது, ஆளும் நிர்வாகத்தின்; பெலம் மேலோங்கி, ஆவிக்குரிய திருச்சபையின், பெலம் குன்றிய, அதாவது, மூன்றாம் நூற்றாண்டிற்கு பிற்பட்ட, “புனித உரோமைப் பேரரசின்” கத்தோலிக்க சபையிலும், “பெந்தக்கோஸ்து மிஷன்” முழுமையாக அழிந்து போகவில்லை.
அரசியல், ஆடம்பர, உலகத் திருச்சபை, ஆவிக்குரிய சபைக்குள் நுழைவதைக் கண்டு, அதிர்ச்சியுற்ற அனேக ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள், கத்தோலிக்க திருச்சபையோடுள்ள நெருக்கத்தைக் குறைத்துக் கொண்டு, “நற்செய்திப் படிப்பினைக்கு கட்டுப்பட்டு”, ஆவிக்குரிய வாழ்க்கை வாழ, காடுகளிலும், வனாந்தரங்களிலும், தொடர்ந்து தங்கினர்.
இவர்கள், வேதகலாபனையின் போது, காடுகளிலும், குகைகளிலும், மறைந்து வாழ்ந்த, ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள். ஆனால், சுதந்திரமான ஒரு காலம் வந்த பின்பும், இவர்களில் பலர், பொது வாழ்வுக்கு திரும்பி வரவில்லை.
இன்று, கத்தோலிக்க திருச்சபைக்குள் நாம் காணும், “துறவற மடாலயங்கள்” எல்லாம், இந்தப் பின்னணியிலும், பாரம்பரியத்திலும், வந்தவையே.
ஆங்காங்கே ஒதுங்கி வாழ்ந்த, இந்த குழுக்களிடம், ஆதிசபையில் இருந்த, “பெந்தக்கோஸ்து மிஷன்”, தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காண்: “தழுவியமைத்து துறவற வாழ்வை புதுப்பித்தல்” - முன்னுரை1, இரண்டாம் பத்தி, சங்க ஏடுகள்.
8. பாஸ்கா காலமும், பெந்தக்கோஸ்து மிஷனும்
ஆதிசபைக்கு பிந்திய, கத்தோலிக்க சபையில் இருந்த, “பெந்தக்கோஸ்து மிஷன்”, வழிபாடுகளுக்குள், இன்னும் தொடர்ந்தது என்பது, ஒரு சந்தோஷமான வரலாற்றுச் செய்தி.
பாஸ்கா காலத்தின் மொத்தமுள்ள, ஐம்பது நாட்களில், முதல் நாற்பது நாட்கள், ஆவிக்குரிய வாழ்வுக்கான, வேத பாடங்களை கற்றுத் தந்தார்கள்.
கடைசி பத்து நாட்களில், ஆவிக்காக காத்திருந்து ஜெபிக்க, பயிற்சி தந்தார்கள்.
ஐம்பதாம் நாளன்று, “பெந்தக்கோஸ்து அனுபவத்தை” தந்து, “அருட்பொழிவு” பெற்ற அனைவருக்கும், தண்ணீர் திருமுழுக்கு அளித்து, கிறிஸ்தவ, அதாவது ஆவிக்குரிய குடும்பத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.
இவ்வாறு, வழிபாட்டுக்குள் செயல்பட்ட, “பெந்தக்கோஸ்து மிஷன்” (இரட்சிப்பு அபிஷேகம்), இன்று அப்படியே தொடராவிட்டாலும், ஆதியில் இருந்த அதே வழிபாட்டு அமைப்பு, இன்றும் கத்தோலிக்க சபையில் இருந்து வருகிறது.
9.மடாலயங்களும், “பெந்தக்கோஸ்து மிஷனும்”
ஆதிசபைக்கு பிந்திய கத்தோலிக்க சபையில், தொடக்கத்திலேயே தோன்றிய மடாலயங்களில், பெந்தக்கோஸ்து மிஷன், தொடர்ந்து செயல்பட்டது.
நற்செய்திப் படிப்பினைக்கு கட்டுப்பட்டு, மனம் திரும்பி, இரட்சிக்கப்பட்டு வாழ்ந்த, அனேக கூட்டமைப்புக்களில், ஆவிக்குரிய வாழ்வு மலர்ந்தது. அனேக அபிஷேக அனுபவங்களும், வெளிப்படையாகத் தென்பட்டன. அனேக துறவிகள், மீட்புக்கான படிப்பினைகளை, போதனைகளாகவும், ஞானநூற்களாகவும், மக்களுக்கு தந்து உதவினர்.
ஆவியின் வரங்களைப் பெற்ற, அனேக துறவிகள், மக்கள் முன் புதுமைகள் செய்து, “இறைவார்த்தைகளை” மெய்ப்பித்தனர்.
இத்தகைய துறவிகளையெல்லாம், கத்தோலிக்க திருச்சபை, “புனிதர்கள்” என்று பட்டம் சூட்டி, கௌரவித்தது.
இந்த புனிதர்களில், புனித ஜாண் கிறிஸாஸ்தம், புனித ஜாண் ஆஃப் த கிறாஸ், புனித அந்தோணியார், புனித பெரிய தெரசாள், புனித அல்போன்ஸம்மாள், போன்ற இன்னும் பலர், பரவசப் பேச்சு – “Glosalalia” - என்னும் “ஆவிக்குரிய வரத்தை” தங்கள் ஜெப வாழ்வில், பயன்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஆவியின் வரங்களையும், கனிகளையும் கொண்ட, ஒரு பெந்தக்கோஸ்து மிஷன், கத்தோலிக்க திருச்சபையில், மடாலயங்களுக்குள், புனிதமாகப் பாதுகாக்கப்பட்டு, தொடர்ந்தது என்பது, சரித்திர உண்மை.
“நற்செய்தி அறிவுரைகளைக் கடைபிடிப்பதன் வழியாக, அதிக சுதந்திர மனப்பான்மையோடு, கிறிஸ்துவைப் பின்பற்ற உறுதி பூண்டு, நெருங்கி அவரைக் கண்டு பாவித்து, இறைவனுக்கென ஒப்புக்கொடுக்கப்பெற்ற, வாழ்வைத் தத்தம் முறையில் வாழ்ந்த, ஆண்களும் பெண்களும், திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்திருக்கின்றனர். இவர்களுள் பலர், தூய ஆவியினால் தூண்டப் பெற்று, தன்னந்தனிமையில், தம் வாழ்நாளைக் கழித்தனர். அல்லது, துறவறக் குடும்பங்களைத் தோற்றுவித்தனர். திருச்சபையும், இவற்றை மனமுவந்து ஏற்று, அதிகாரப்பூர்வமாக ஒப்புறுதி அளித்தது. இவ்வண்ணம், இறை திருவுளத்தால், பல்வேறு துறவறக் குழுக்கள், வியத்தகு முறையில் தோன்றி வளர்ந்தன. திருச்சபை, எல்லா வகையான நற்செயல்களையும் செய்யத், திறம் படைத்ததாயிருக்கும் பொருட்டும் - 2திமொ 3:17, கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்புவதற்கான, திருப்பணிக்குரிய வேலையை செய்ய, ஆற்றலுடையதாய் இருக்கும் பொருட்டும், மேற்கூறிய துறவறக் குழுக்கள், உறுதுணையாய் அமைந்தன - எபே 4:12. அதுமட்டுமின்றி, திருச்சபை தன் பிள்ளைகளின் பல்வேறு கொடைகளால், மனுமகனுக்கென அலங்கரிக்கப்பட்ட மணமகளைப் போல் - வெளி 21:2, காட்சியளிக்கவும், இவ்விதத்தில் பலவகையாய் செயல்படும், இறைஞானம் - எபே 3:10, தன்மூலம் மிளிரும்படி செய்யவும், துறவறக் குழுக்கள், உறுதுணை நல்கியுள்ளன.
1.காண்: “தழுவியமைத்து துறவற வாழ்வை புதுப்பித்தல்” - முன்னுரை1, இரண்டாம் பத்தி, சங்க ஏடுகள்.
10.“பெந்தக்கோஸ்து மிஷனும்” மறுமலர்ச்சியும்
கத்தோலிக்க திருச்சபையின் சரித்திரத்தில், பல ஏற்றத்தாழ்வுகளும், மேடு பள்ளங்களும் இருந்தாலும், அதன் ஜீவ ஊற்றாகிய “ஆவியின் வழிநடத்தல்”, என்ற “பெந்தக்கோஸ்து மிஷன்”, முழுமையாக வற்றிப் போகவில்லை.
கால ஓட்டத்தில், கி.பி 12-ம் நூற்றாண்டில், கிழக்கத்திய சபைகளும், கி.பி 16-ம் நூற்றாண்டில், புராட்டஸ்டண்டு சபைகளும், கத்தோலிக்க சபையிலிருந்து பிரிந்தன.
ஒரே சபையாய் இருந்த கத்தோலிக்க சபை, 16-ம் நூற்றாண்டிற்கு பின்பு, பிரிந்து மூன்று சபைகளாக செயல்பட்டன. அவற்றின் தன்மையில், மூன்று சபைகளும், அகில உலக, அதாவது கத்தோலிக்க சபைகளே.
ஆதிசபைக்கு பிந்திய கத்தோலிக்க திருச்சபையில் இருந்த, அரசியலை, உரோமன் கத்தோலிக்க சபையும், பக்தி வைராக்கியத்தை, சிறியன், ஆர்தடாக்ஸ் போன்ற கிழக்கத்திய சபைகளும், இறை வார்த்தையை, புராட்டஸ்டண்டு சபையும், முறையே தக்க வைத்துக் கொண்டன. அதாவது, மேற்சொன்னவை இந்த சபைகளில் “அதிக முக்கியத்துவம்” பெற்றன.
ஆனால், இந்த மூன்று திருச்சபைகளிலும், ஆவிக்குரிய உள்ளார்ந்த செயல்பாடுகள் என்றும் இருந்தன என்பதை, யாரும் மறுக்க முடியாது.
“இரண்டாம் பொழிதலும்” - மறுமலர்ச்சியும் :
ஆவிக்குரிய வாழ்வும், செயல்பாடுகளும், எல்லா திருச்சபைகளுக்குள்ளும் மறைந்து காணப்பட்டாலும், உள்ளார்ந்த விதத்தில், “ஓர் ஆவிக்குரிய தேடுதல்” இந்த திருச்சபைகளில் அதிகமாக காணப்பட்டன.
“இறைவார்த்தை மறுமலர்ச்சிகள்”, “பக்தி கொண்டாட்டங்கள்” போன்றவை, ஓர் ஆவிக்குரிய மறுமலர்ச்சியின் தாகத்தை, எல்லா திருச்சபைகளிலும் தந்தன.
இதனால், பேரிரக்கமும், தயவும் நிறைந்த கடவுள், திருச்சபைகளில் ஆங்காங்கே, பக்தியுள்ள விசுவாசிகளுக்கு, ஆவிக்குரிய அனுபவங்களைத் தர ஆரம்பித்தார்.
ஆதியில், பெந்தக்கோஸ்து நாளன்று, இறங்கி வந்த ஆவியானவரின் அனுபவம், இன்னும் அதிகமாய் வேண்டும்; அப்படியே, ஒரு ஆதி ஆவிக்குரிய வாழ்க்கை தொடர வேண்டும், என்ற தேடலும், தவிப்பும், திருச்சபைகளுக்குள், எல்லாரிடமும் பரவலாக உண்டாக ஆரம்பித்தன.
இதன் விளைவே, “இரண்டாம் பொழிதல்”.
ஆதி அப்போஸ்தலர் மேல், பெந்தக்கோஸ்து நாளன்று இறங்கி வந்த, அதே ஆவியின் அனுபவம், திருச்சபைகளுக்குள், மீண்டும் உண்டாக ஆரம்பித்ததை, நாம் “இரண்டாம் பொழிதல்” என்கிறோம்.
இதன்படியே, கி.பி. 18-ம் நூற்றாண்டிலிருந்து, ஆவியானவரின் “இரண்டாம் – பொழிதல்” இந்த திருச்சபைகளில், வெளிப்படையாக வர ஆரம்பித்தது.
இறைவார்த்தை எங்கே, வளமாக செயல்பட ஆரம்பிக்கிறதோ, அங்கே ஆவிக்குரிய செயல்பாடுகளும், வெளிப்படையாக துலங்க ஆரம்பிக்கும் - தி.ப 10:44-48.
புராட்டஸ்டண்டு சபையை ஆரம்பித்த, மார்ட்டின் லூதர் போன்ற பல தலைவர்கள், தாங்கள் தோற்றுவித்த சபைகளில், இத்தகைய பெந்தக்கோஸ்து அனுபவங்கள், ஆங்காங்கே வெளிப்படுவதை உணர்ந்தனர்.
ஆனால், கடுமையான கட்டளைகளுக்குள்ளும், கட்டுப்பாடுகளுக்குள்ளும், தங்கள் சபைகளை வைத்துக்கொள்ள விரும்பிய புராட்டஸ்டண்டு சபையின் தொடக்க தலைவர்கள், சபைகளுக்குள், இத்தகைய பெந்தக்கோஸ்து அனுபவங்கள் செயல்படுவதை, வெளிப்படையாக ஊக்கப்படுத்தவில்லை.
எட்வர்டு இர்விங் - கி.பி 1830 – Edward Irving :
இவர், ஸ்காட்லான்டில் உள்ள, ஒரு ப்றஸ்பிட்டேரியன் குருவானவர்.
இவர் ஆலயத்தில் போதிக்கும் போது, ஆதி அப்போஸ்தலர் கால, ஆவிக்குரிய திருச்சபையே, இன்றைய உலகின் அத்தியாவசிய தேவை என்று, அறிவிக்கத் தொடங்கினார்.
இதைக் கேட்ட அனேகர், இவரோடு சேர்ந்து, ஜெபக்கூட்டங்களில் கலந்து கொண்டு, “இரண்டாம் - பொழிதலை” அனுபவிக்க ஆரம்பித்தனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த ஆயர்கள், இவரை திருச்சபையை விட்டு வெளியேற்றினர்.
மேரி கேம்பெல், கார்டேல் சகோதரிகள் - கி.பி 1830, 1831 - Miss.Mary Campbell&Mrs.Cardale :
இச்சகோதரிகள், ஜெபித்துக்கொண்டிருக்கும் போது, ஆதி ஆவிக்குரிய அனுபவம் கிடைக்கப்பெற்று, பரவசத்தில் பேசினர்.
இவர்களை கவனித்த மற்றவர்களும், இவர்களோடு சேர்ந்து, ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்றனர்.
இந்த குழுவையும், எட்வர்டு இர்விங் ஊக்கப்படுத்தினார்.
கத்தோலிக்க அப்போஸ்தல திருச்சபை - கி.பி 1832 :
“இரண்டாம் - பொழிதலை” பெற்றுக்கொண்ட மக்களின் எண்ணிக்கை பெருகுவதைக் கண்ட இர்விங், “கத்தோலிக்க அப்போஸ்தல சபை” என, ஒரு தனி சபையை உருவாக்கி, பெந்தக்கோஸ்து அனுபவம் பெற்ற மக்களை வளர்த்தார்.
ஜாண் அலெக்ஸாந்தர் டோவே - கி.பி 1901 - John Alexander Dowie :
இவர் ஒரு காங்கிரகேஷனல் பாஸ்டர். மிகுந்த ஆவிக்குரிய வரங்களையும், அனுபவங்களையும் பெற்று, பிரபலமடைந்தார்.
இர்விங் வாழ்ந்த அதே பகுதியை சார்ந்தவர்.
கிறிஸ்தவ கத்தோலிக்க சபை :
டோவே, தன்னோடு சேர்ந்து, ஆவிக்குரிய மக்கள், கூட்டமாகப் பெருகுவதைக் கண்ட போது, இவர் “கிறிஸ்தவ கத்தோலிக்க சபை” எனும், தனித் திருச்சபையை ஆரம்பித்து, ஆவிக்குரிய அனுபவத்தை, மக்களிடையே வளர்த்தார்.
சார்லஸ் ஃபேக்ஸ் பெர்ஹாம் - கி.பி 1901 – Charles Fox Parham :
இதே காலகட்டத்தில், பெர்ஹாம் என்பவர், ஆவிக்குரிய சபைகளை உருவாக்கி, “இரண்டாம் – பொழிதலுக்காக”, மக்களை ஆயத்தப்படுத்துவதில், பிரபலம் அடைந்தார்.
இந்த “இரண்டாம் - பொழிதலுக்கு” அவர் “ஆவியில் திருமுழுக்கு” என்று பெயரிட்டார்.
அசூசா தெரு ஊழியம் – Azusa street mission :
புராட்டஸ்டண்டு பெந்தக்கோஸ்து சபைகளின் வளர்ச்சியில், அசூசா தெரு ஊழியம், மிக முக்கியம் அடைந்தது.
இதனால், பல புதிய பெந்தக்கோஸ்து சபைகள், இந்தக் காலங்களில் உதயமாயின.
சர்ச் ஆஃப் க்றைஸ்ட் - கி.பி 1903
சர்ச் ஆஃப் காட் - கி.பி 1907
அசம்பிளி ஆஃப் காட் - கி.பி 1914
பெந்தக்கோஸ்து சர்ச் ஆஃப் காட் - கி.பி 1919
மேற்சொன்ன சபைகளின் வளர்ச்சியில், சார்லஸ் பெர்ஹாம் (Charles Parham), வில்லியம் ப்ரான்ஹெம் (William Branham), போன்றவர்கள், மிக முக்கியமாக இடம் பெற்றனர்.
டென்னிஸ் பென்னட் - கி.பி 1950-1975 – Dennis Bennett :
இவர் அமெரிக்காவில், கலிபோர்னியாவில், எப்பிஸ்கோப்பல் திருச்சபையின் குருவாக பணியாற்றியவர்.
இவரும், தன்னுடைய ஊழியத்தின் போது, வெளிப்படையாக, “இரண்டாம் பொழிதல்” அனுபவத்தைப் பெற்றார்.
இதனால், தான் பணியாற்றிய சபையில், ஆவிக்குரிய மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தார்.
இது மிக வேகமாகப் பரவி, பல்லாயிரம் மக்களுக்கு, பெந்தக்கோஸ்து அனுபவத்தை தந்தது.
உலகமெங்கிலுமுள்ள, ஆங்கிளிக்கன் திருச்சபையில், ஆவிக்குரிய மறுமலர்ச்சி உருவாக, இதுவே காரணமானது.
மேலும், லுத்தரன் சபை, பாப்டிஸ்டு சபை, போன்ற பெரிய திருச்சபைகளில், ஆவிக்குரிய மறுமலர்ச்சி, இந்தக் காலங்களில், மிக வேகமாகப் பரவியது.
ஆவிக்குரிய மக்கள் வெளியேற்றம் :
ஆனால், இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், புராட்டஸ்டண்டு சபையினர், இந்த “இரண்டாம் பொழிதலை” புறக்கணித்தது ஆகும்.
புராட்டஸ்டண்டு சபைகளில், இந்த ஆவிக்குரிய மறுமலர்ச்சியின் தொடக்க காலத்திலிருந்தே, ஆவிக்குரிய அனுபவம் பெற்றவர்கள், திருச்சபைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனால், புராட்டஸ்டண்டு பெந்தக்கோஸ்து “சபைகள்”, சிறு சிறு குழுக்களாக, உலகமெங்கும் புற்றீசல் போல் பரவி, வளர ஆரம்பித்தன.
ஆனால், புராட்டஸ்டண்டு ஸ்தாபன சபைகளில், மக்களின் எண்ணிக்கை குறைவதைக் கண்ட, திருச்சபைத் தலைவர்கள், சமீப காலத்தில், இந்த வெளியேற்றுதலை நிறுத்தினர்.
கத்தோலிக்க திருச்சபையில் “இரண்டாம் பொழிதலும்”, பெந்தக்கோஸ்து மறுமலர்ச்சியும் :
இரண்டாம் வத்திக்கான் பொது சங்கம் :
1962, 1963 - களில், திருத்தந்தை 23 -ம் ஜாண், இரண்டாம் வத்திக்கான் பொது சங்கத்தை ஆரம்பித்தார்.
பொது சங்கத்தை தொடங்கி வைத்து ஜெபித்த வேளையில், திருத்தந்தை இவ்வாறு ஜெபித்தார்.
“புதிய பெந்தக்கோஸ்து பொழிதல் மலரட்டும்” :
“இறைவா எம் திருச்சபைக்குள்ளால், ஒரு புதிய பெந்தக்கோஸ்து பொழிதல் மலரட்டும். திருச்சபையின் எல்லா கதவுகளும், ஜன்னல்களும், திறக்கப்படட்டும். ஒரு புதிய பெந்தக்கோஸ்து தென்றல், திருச்சபைக்குள் வீசட்டும் ......”.
திருத்தந்தையின் இந்த ஜெபத்தைக் கடவுள் கேட்டார்.
தேயி வெர்பும் :
இரண்டாம் வத்திக்கான் பொது சங்கத்தின் கொள்கைத் திரட்டுகளில், இறை வார்த்தை மறுமலர்ச்சி பற்றிய கொள்கைத் திரட்டு, “தேயி வெர்பும்” என்ற பிரகடனமாகும்.
இந்தக் கொள்கைத் திரட்டு வெளியானதும், அகில உலகிலுமுள்ள, கத்தோலிக்க திருச்சபையில். “வீட்டுக்கொரு விவிலியம், ஆளுக்கொரு விவிலியம்”, என்று, விவிலிய மறுமலர்ச்சி உண்டாக ஆரம்பித்தது.
இறை வார்த்தையை, “ஆராதனைப்” பொருளாக வைத்து, போற்றிய கத்தோலிக்க சபை, இப்போது அதை, “ஆகாரமாகவே” உண்டு, அந்நாளிலிருந்து வளர ஆரம்பித்தது.
அதன் விளைவு என்ன? “இரண்டாம் பொழிதலும், கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மறுமலர்ச்சியும்”.
“இரண்டாம் பொழிதலும்”, கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மறுமலர்ச்சியும் :
திருத்தந்தை அவர்களின் ஜெபத்தைக் கேட்ட கடவுள், “இரண்டாம் பொழிதல்”, என்ற, “புதிய பெந்தக்கோஸ்து” மறுமலர்ச்சி ஒன்றை, கத்தோலிக்க திருச்சபைக்கு தந்தார்.
டுக்வெஸின் பல்கலைக்கழகம் - கி.பி 1967- Duquesne University :
1967 - ம் ஆண்டு, பெப்ருவரி திங்கள், 17 -ம் நாள் தொடங்கி, 19-ம் நாள் முடிய, பிட்ஸ்பர்க்கிலுள்ள (Pittsburg), டுக்வெஸின் பல்கலைக்கழகத்தில், (Duquesne University) பட்டதாரி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், தியானம் ஒன்று நடைபெற்றது.
இந்த தியானத்தை, பிரான்சு (France) நாட்டிலுள்ள, “பரிசுத்த ஆவி சபை” யைச் சார்ந்த, (Congregation of the Holy Spirit ) துறவிகள் நடத்திக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று, ஆதி அப்போஸ்தலருக்கு, பெந்தக்கோஸ்து நாளன்று பொழிந்த, அதே “அருட்பொழிவு”, அவர்களுக்கும் கிடைத்தது. அனைவரும், தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, பரவசத்தில் பேசி, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
இதுவே, கத்தோலிக்க சபையில், “இரண்டாம் பொழிதலின்” ஆரம்பம் ஆகும்.
கெவின் ரெனகானும் - டோர்தியும்- கி.பி 1967- Kevin Ranagan & Dorothy :
இவர்களில் கெவின் ரெனகான் என்பவரும், அவருடைய துணைவியார், டோர்தி என்பவரும், அங்கே பேராசியர்களாகப் பணியாற்றியவர்கள்.
இவர்கள் இருவரும், அருட்பொழிவால் நிறைந்து, புதுவாழ்வைக் கண்டார்கள். இந்த ஆவிக்குரிய தம்பதியரே, கத்தோலிக்க ஆவிக்குரிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர்களில், முக்கியமானவர்கள்.
நோட்ரடேம், மிச்சிக்கான் பல்கலைக்கழகம் -கி.பி 1967- Notre Dame, Michhigan University :
அவ்வாறே, அதே காலகட்டத்தில், நோட்ரடேம், மிச்சிக்கான் பல்கலைக்கழகத்திலும், மாணவர்கள், ஜெபித்துக்கொண்டிருந்த போது, ஆதி சபையின், அதே பெந்தக்கோஸ்து அனுபவங்களைப் பெற்று களிப்படைந்தனர்.
இந்த கத்தோலிக்க கல்லூரி மாணவர்கள், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்தவர்கள் என்பதால், “கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மறுமலர்ச்சி”, வெகு வேகமாக, உலகமெங்கும் பரவியது.
வளர்ச்சி :
ஆயர்கள், குருக்கள், துறவியர், பொது நிலையினர், என எல்லா நிலைகளிலுமுள்ள கத்தோலிக்கரை, இந்த பெந்தக்கோஸ்து மறுமலர்ச்சி தொட்டது.
கத்தோலிக்க உலகமெங்கும், மறுபடியும் பிறத்தல் அனுபவம், பெந்தக்கோஸ்து மறுமலர்ச்சி விழாக்கள், கரிஸ்மேட்டிக் குழு கூட்டங்கள், ஆவிக்குரிய ஜெபக் கூட்டங்கள், ஆவிக்குரிய விடுதலை இயக்கங்கள், ஆவிக்குரிய ஊழியப் பயிற்சிகள், என பல தலயங்கங்களில், ஆவிக்குரிய மறுமலர்ச்சி, கத்தோலிக்க திருச்சபையில், ஜூவாலை விட்டு எரிந்தது.
படிப்பகங்களிலும், நூலகங்களிலும், பெந்தக்கோஸ்து மறுமலர்ச்சி சம்மந்தப்பட்ட, ஆயிரமாயிரம் புத்தகங்கள் வந்து குவிந்தன.
திருத்தந்தை ஆறாம் பவுல் – Pope Paul VI :
அப்பொழுது திருச்சபையின் தலைவராக இருந்த, போப் ஆறாவது பவுல், கத்தோலிக்க சபைக்குள் வந்த, இந்த பெந்தக்கோஸ்து மறுமலர்ச்சியை, மகிழ்ச்சியோடு வரவேற்றார்.
திருச்சபையின் “கட்டமைப்புக்குள்”, இந்த பேரியக்கம் புகுந்து, வளர வேண்டுமென்று, ஆசித்தார்.
பலமுறை, அகில உலக “கத்தோலிக்க பெந்தக்கோஸ்து கன்வென்ஷன்களில்” கலந்து, தாமும், ஆவிக்குரிய அனுபவங்களில் களித்தார்.
கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மறுமலர்ச்சியின் தலைவராக, கார்டினல் சியூனன்ஸ் என்பவரை, ஏற்படுத்தினார்.
ஆவிக்குரிய மக்கள் வெளியேற்றம் :
கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மறுமலர்ச்சியை, மகிழ்ச்சியோடு வரவேற்று, அது கத்தோலிக்க சபை எங்கும், பரவி வளர, துணையாக இருந்த போப் ஆறாம் பவுல், 1978 - ல் மரணமடைந்தார்.
அதுவரையிலும், ஆவிக்குரிய மறுமலர்ச்சியை, “கத்தோலிக்கர்களின் அடிப்படையான ஆத்மீக அனுபவம்” என எண்ணி, அதில் முழுமையாக தங்களைக் கையளித்த, ஆயர்கள், குருக்கள், கன்னியர், விசுவாசிகள், இறையியலாளர்கள், அனைவருக்கும், திருத்தந்தையின் மரணம், ஒரு பெரிய பின்னடைதலைத் தந்தது.
கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மறுமலர்ச்சியை ஏற்றுக்கொள்ள விரும்பாத, கத்தோலிக்க அதிகார பீடம், இப்போது தலைதூக்க ஆரம்பித்தது.
மேல்மட்டத்திலிருந்து, கீழ்மட்டம் வரையிலும், தங்களுக்கு கிடைத்த, எல்லா அதிகார வாய்ப்புக்களையும், இவர்கள் நன்கு பயன்படுத்தி, இந்த புனிதமான மறுமலர்ச்சியை, திருச்சபையில் ஓரம் கட்ட ஆரம்பித்தனர்.
இதனால், கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மறுமலர்ச்சியை ஏற்றுக்கொண்டவர்கள், “கத்தோலிக்க ஸ்தாபன சபையிலிருந்து”, வெளியேற்றப்பட்டனர் அல்லது, அவர்களாகவே வெளியேறினர்.
இவ்வாறு மீண்டும், ஆத்மீக வளர்ச்சியில்லாத, ஒரு வறண்ட, வெறுமையான, கத்தோலிக்க ஸ்தாபன சபையின் கரம், வலுவடைந்து, வளர ஆரம்பித்தது.
கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபைகளின் ஆரம்பம் :
1967 - முதல், ஏறக்குறைய 1980 - வரையிலான காலத்தில் உண்டான, ஆவிக்குரிய பசுமை அனுபவங்களைப் பெற்ற, கத்தோலிக்க விசுவாசிகள், கத்தோலிக்க ஸ்தாபன சபைகளை விட்டு விட்டு, புராட்டஸ்டண்டு பெந்தக்கோஸ்து சபைகளுக்கு, இடம் பெயரத் தொடங்கினர்.
இதைக் கண்ணுற்ற “ஆவிக்குரிய ஆயர்களும், குருக்களும்”, உலகின் பல்வேறு பாகங்களில், “கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபைகளை” உருவாக்கத் தொடங்கினர்.
இதனால், புராட்டஸ்டண்டு பெந்தக்கோஸ்து சபைகளுக்கு, திரளாகச் சென்ற ஆவிக்குரிய கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும், கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அதே வேளையில், பெந்தக்கோஸ்து அனுபவத்தில், ஆவிக்குரிய விசுவாசிகள், மேன்மேலும் வளரத் தொடங்கினர்.
கத்தோலிக்க கரிஸ்மேட்டிக் சர்ச் - கி.பி 1968- Catholic Charismatic Church :
இந்த சபைதான், முதன் முதலில் தோன்றிய, கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபை. இந்த சபை, கனடாவில் ஆரம்பிக்கப்பட்டது.
ஆயர் ஆந்த்ரே பர்பேயு – 1968 – Bp.Andre Barbeau :
இவர் 1940 - ம் ஆண்டு, நவம்பர் திங்கள், 21 -ம் நாள், உரோமன் கத்தோலிக்க குருவாக, திருநிலைப்படுத்தப்பட்டார். இவர், இருபத்தி எட்டு ஆண்டுகள், உரோமன் கத்தோலிக்க குருவாக, பணியாற்றினார்.
ஓர் ஆத்மீகத் தேடதலால் உந்தப்பட்ட இவர், 1968 - ல், இன்டிபென்டன்ட் கத்தோலிக்க சபையான, ஓல்டு ஹோலி கேதலிக் சர்ச் ஆஃப் இங்கிலண்டு (Old Catholic Church of England) சபையில், சேர்ந்து கொண்டார். ஆந்த சபையின் ஆயர், சார்லஸ் ப்ரேயர்லி (Bp.Charles Brearley) என்பவரால், அவர் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
அந்த ஆண்டே அவர், “இரண்டாம் - பொழிதலை|”அனுபவித்தார். அப்போதிருந்து, அவர் ஆவிக்குரிய கத்தோலிக்கரிடையே, பணியாற்ற ஆரம்பித்தார். கத்தோலிக்கர்களுக்காக, ஆரம்பித்த சபைக்கு, “கத்தோலிக்க கரிஸ்மேட்டிக் சர்ச்” என்று, பெயர் வைத்தார்.
கனடாவில் ஆரம்பித்த இந்த சபை, அந்த நாடு முழுவதிலும், மிகச் சீக்கிரத்தில் பரவியது. பின்பு, உலகின் பல்வேறு பாகங்களில், அது வளர ஆரம்பித்தது. 1990 - க்கு முன்னால், அமெரிக்காவின் வடபகுதி எங்கும், இந்த சபை பரவியது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தென்பகுதியாகிய ஃப்ளோறிடாவிலும் (Florida), தென்மேற்குப் பகுதியாகிய அரிசோனா (Arizona), நியூ மெக்ஸிகோ (New Mexico), போன்ற பகுதிகளிலும், மேற்கில் டெக்ஸாசிலும் (Texas), இந்த திருச்சபை, வலுவடைந்து வளர்ந்தது.
1994 பெப்ருவரி 14 - ம் நாள், இந்த ஆயர் காலமானார். இவருக்குப் பின், இவரால் ஆயராக்கப்பட்ட, ஆந்த்ரே லிட்டேல்லியர் (Andre Letellier), இந்த திருச்சபையின், ஆயரானார். இப்போது, பலநூறு பங்குகளைக் கொண்ட, ஒரு பரந்து விரிந்த, திருச்சபையாக, இந்த சபை உலகமெங்கும் வளர்ந்து வருகிறது.
“கடவுளுடைய மீட்பின் திட்டத்தில், கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபைகள் :
இரண்டாயிரம் ஆண்டு திருச்சபையின் சரித்திரத்தில், பல காலகட்டங்களில், பல காரணங்களுக்காக, திருச்சபை உடைந்து, பிரிந்து, பல திருச்சபைகளாக வளரத் தொடங்கின.
திருச்சபைக்குள், “உலகம்” அதிகமாக நுழைந்து, “ஆத்மீகம்” குறைந்த காலங்களில் தான், இந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
தன்னை நம்பியிருக்கின்ற விசுவாசிகளை, கடவுள் ஒருபோதும் கைவிடார் என்ற, அடிப்படையில், கடவுள், திருச்சபையில் இந்த பிளவுகளை எல்லாம், அனுமதித்தார் என்றும், இதனால், உலகெங்குமுள்ள, பல்வேறு விசுவாசிகளின், ஆத்மீக தாகத்தை, பல்வேறு திருச்சபைகளால் தீர்த்தார் என்றும், இதனால் நாம் அறிகிறோம்.
“கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபைகளும் - கடவுளுடைய இரக்கச் செயல்களில் ஒன்றே :
மேலும், கடவுளுடைய இரக்கச் செயல்களில் ஒன்றே, கத்தோலிக்க ஆவிக்குரிய மக்களுக்கு, கடவுள் அளிக்கும், கத்தோலிக்க ஆவிக்குரிய சபைகள்.
பல நூறு ஆண்டுகளாக, கத்தோலிக்க வைராக்கியத்தில், பிடிப்பாக நின்று, ஆத்மீக “வளர்ச்சியை” தேடிய, கத்தோலிக்க விசுவாசிகளுக்கு, 1967 - முதல் 1980 - வரையிலும் உள்ள காலம், ஒரு வரப்பிரசாத காலமாக இருந்தது.
ஆனால், திருச்சபையின் மாறுபட்ட கொள்கைகளினால், ஏமாற்றம் அடைந்த விசுவாசிகள், கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபைகளின் நிழலில், இளைப்பாறத் தொடங்கினர்.
கத்தோலிக்க பாரம்பரியம், படிப்பினை, விசுவாசம், வழிபாடு, போன்றவற்றின் உயர் நிலையை அறிந்த கத்தோலிக்க விசுவாசிகள், அதை விட்டுப் பிரிய விரும்பவில்லை.
ஆனால், அதே வேளையில், ஒரு “உலகத் திருச்சபையின்” நிர்வாகத்தின் கீழ், வாழவும் விரும்பவில்லை.
எனவே, கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபைகளை, விசுவாசிகள் ஊக்கப்படுத்தினர்.
உலகெங்கிலுமுள்ள, கத்தோலிக்க பெந்தக்கோஸ்து விசுவாசிகள், கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபைகளின் பேராதரவால், பலுகிப் பெருகி, வளர்கின்றனர்.
கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் - மார்த்தாண்டம் :
மேற்சொன்ன அனுபவங்களின் பின்னணியில், தோன்றியதே, மார்த்தாண்டம் கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் அல்லது CPM சபை.
1980 - முதல் 1986 - வரையிலும், கத்தோலிக்க விசுவாசிகளுடைய மத்தியில், ஆவிக்குரிய மறுமலர்ச்சியை உருவாக்கிய இந்த ஊழியமும், பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருந்தது.
ஆவிக்குரிய அனுபவம் கொண்ட, கத்தோலிக்க விசுவாசிகளுக்கு, ஆவிக்குரிய அனுபவமில்லாத மேலிடங்களிலிருந்து, நெருக்கடிகளும், கஷடங்களும், வர ஆரம்பித்தன.
பல கத்தோலிக்கர்கள், ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்ற ஒரே காரணத்திற்காக, சபைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர், அல்லது துன்புறுத்தப்பட்டனர்.
கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அதே வேளையில், ஆவிக்குரிய வாழ்க்கை நடத்த விரும்பிய, கத்தோலிக்க ஆவிக்குரிய விசுவாசிகளுக்காக, ஒரு கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபை, உருவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதன்படி உருவானதே, “மார்த்தாண்டம் - கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன்” ஆகும்.
இதனால், “கத்தோலிக்க விசுவாசத்தை” இழந்து, புராட்டஸ்டண்டு பெந்தக்கோஸ்து சபைகளுக்குத் தாவும், அனேக ஆவிக்குரிய கத்தோலிக்க விசுவாசிகளை, அரவணைத்து வழிநடத்த CPM சபையால் முடிகிறது.
கத்தோலிக்க பெந்தக்கோஸ்து விசுவாசிகளின் பேராதரவால், இன்று மிகப் பிரமாண்டமான, ஆவிக்குரிய சபை ஒன்று, மார்த்தாண்டத்தில் உருவாகி, வளர்ந்து வருகிறது.